நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கரடி, புலி, காட்டு யானை, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதால் மனித - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த ஆண்டு கோடை சீசனின்போது, குன்னூரில் இருந்து காட்டு யானை முதல் முறையாக ஊட்டி அடுத்த தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்தது.
இதேபோல் இந்த ஆண்டும் கோடை சீசன் சமயத்தில் மற்றொரு காட்டு யானை தொட்டபெட்டா மலை சிகரம் பகுதிக்கு வந்தது. பின்னர் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது. சமீபத்தில் ஊட்டி பன்சிட்டி அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இதனால் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை திடீரென காட்டு யானை ஊட்டி நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டின்ஸ் சாலையில் புகுந்து உலா வந்தது. அங்குள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது. பின்னர் அங்கிருந்து சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது. நகரில் ரோஜா பூங்கா அருகே உள்ளிட்ட சில பகுதிகளில் காட்டு யானை உலா வந்தது. அங்குள்ள காய்கறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
தற்போது எல்க்ஹில் பகுதியில் காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இந்த யானையை வனச்சரகர் ராமபிரகாஷ் தலைமையிலான குழுவினர் டிரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர். காட்டு யானை நடமாட்டம் காரணமாக நேற்று எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறும்போது, நீலகிரியில் வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இருந்தாலும், ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில் காட்டு யானை ஊட்டி நகரின் மையப்பகுதிக்கு வந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக யானை ஊட்டி நகருக்குள் புகுந்து உள்ளது. பொதுமக்களுக்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, மாவட்ட நிர்வாகம், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் உடைமைகளுக்கும், உயிர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.