ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள காவிலிபாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானை ஒன்று புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் யானைகள், மான்கள், குரங்குகள், சிறுத்தைப்புலிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை, பவானிசாகர்–மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து புஞ்சைபுளியம்பட்டி–சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக காவிலிபாளையம் அருகே உள்ள வாணிச்சிபாளையம், தொட்டிபாளையம் மற்றும் கொண்டையம்பாளையம் கிராமங்களுக்குள் நள்ளிரவில் புகுந்தது.
அங்கு தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் தென்னை மரங்களை யானை சேதப்படுத்தியதுடன், தோட்டங்களைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சைரன் ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால், விடிய விடிய மேற்கொண்ட முயற்சிகளுக்கும் யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை.
தொடர்ந்து அதிகாலை நேரத்தில் அருகிலுள்ள காவிலிபாளையம் குளத்துக்குச் சென்ற யானை, குளத்தில் இறங்கி நீரில் விளையாடிக் கொண்டிருந்தது. பின்னர் அருகில் உள்ள புதர்ப் பகுதிக்குள் சென்று மறைந்தது.
தற்போது டிரோன் கேமரா உதவியுடன் யானையை கண்காணித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அப்பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.