கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பாதையில் திடீரென காரை வழிமறித்து அச்சுறுத்திய காட்டு யானையிடம் இருந்து, ஓட்டுநர் ஒருவர் சற்றும் பதற்றமடையாமல் காரை பின்னோக்கி இயக்கி சாதுரியமாக தப்பியுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் பயணிகள் சிலர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று திடீரென சாலையின் நடுவே வந்து நின்றது. காரைக் கண்டதும் ஆக்ரோஷமடைந்த அந்த யானை, காரை நோக்கி வேகமாக முன்னேறி வந்து அச்சுறுத்தத் தொடங்கியது. இதனால் காரில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
யானை மிக அருகில் வந்த நிலையிலும், காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சற்றும் பதற்றமடையவில்லை. யானையை மேலும் கோபப்படுத்தாமல் இருக்க, அவர் காரின் ஹாரனை ஒலிக்காமலும், வாகனத்தை முன்னோக்கி செலுத்தாமலும் நிதானமாக காத்திருந்தார்.
தொடர்ந்து, காரை மிக லாவகமாக பின்னோக்கி இயக்கினார். யானை முன்னேறி வர வர, அதற்கு இணையாக காரையும் அவர் பின்னோக்கி நகர்த்திக்கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் கார் பாதுகாப்பான தூரத்திற்கு சென்றதை அடுத்து, யானை அங்கிருந்து நகர்ந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
மலைப்பாதைகளில் வனவிலங்குகள் குறுக்கிடும்போது பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இந்த ஓட்டுநரின் பொறுமையான செயல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆபத்தான சூழலிலும் பதற்றப்படாமல், சாதுரியமாக காரை பின்னோக்கி இயக்கி பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.