தமிழக செய்திகள்

வனத்துறையினர் ஜீப்பை முட்டிக் கவிழ்த்த காட்டு யானை - வனக்காவலர் உள்பட 4 பேர் காயம்

காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஊட்டி,

ஊட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வனத்துறை ஜீப்பை காட்டு யானை முட்டி தள்ளி கவிழ்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் வனத்துறையினர் 4 பேர் காயமடைந்தனர்.

காட்டு யானை

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சோலூர், கோக்கால், சூட்டிங்மட்டம், காடிமந்து, தலப்பதேரி மந்து உள்ளிட்ட தோடர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 10 வயது ஆண் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை அவ்வப்போது விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கடந்த வாரம் அறுவடைக்கு தயாராக இருந்த கேரட் பயிர்களை காட்டு யானை மிதித்து நாசம் செய்தது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சாண்டிநல்லா பகுதியில் காட்டு யானை ஒன்று சாலையை ஒட்டி நிற்பதாக வனத்துறைக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஜீப்பை முட்டி தள்ளியது

அப்போது 8-வது மைல் பகுதியில், தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சிறிய வளைவான மண் சாலையில் வனத்துறையினர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காட்டு யானை நேருக்கு நேர் வந்துவிட்டது. யானை செல்ல வழி இல்லாததால். ஆத்திரமடைந்து வனத்துறையினர் வந்த ஜீப்பை முட்டி தள்ளி கவிழ்த்தது. இதன் பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

யானை ஜீப்பை கவிழ்த்ததில், வன காவலர் உள்பட வனத்துறையினர் 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வனச்சரகர் ராம்பிரகாஷ் கூறுகையில், இந்த யானை மிகவும் அமைதியான குணம் கொண்டது. வழக்கமாக தோட்டத்திற்கு வந்தால் லைட் வெளிச்சம் காட்டினால் கூட மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடும். சம்பவத்தின் போது திரும்பி செல்ல இடம் இல்லாததால் ஜீப்பை முட்டி தாக்கி இருக்கலாம் என்றார்.

SCROLL FOR NEXT