கூடலூர்,
தேவர்சோலை அருகே 20 அடி பள்ளத்தில் ஆட்டோவை காட்டுயானை முட்டித்தள்ளியது. இதில் காயத்துடன் டிரைவர் தப்பினார்.
கூடலூர் அருகே தேவர்சோலையில் இருந்து மாறன் என்பவர் கடசனக்கொல்லிக்கு நேற்று மாலை 5 மணிக்கு ஆட்டோவில் சென்று கொண்டி ருந்தார். ஆட்டோவை டிரைவர் சையது அலி(வயது 50) ஓட்டினார். ஒத்த மரம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே காட்டுயானை ஒன்று ஓடி வந்தது. உடனே ஆட்டோவில் இருந்த மாறன் கீழே இறங்கி தப்பி ஓடினார். ஆனால் அந்த இடத்தில் போதிய இட வசதி இல்லாததால் ஆட்டோவை திருப்ப முடியாமல் வந்த வழியாக பின்னோக்கி சையது அலி இயக்கினார்.
எனினும் காட்டுயானை திடீரென ஆட்டோவை முட்டி சாலையோரம் உள்ள சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றது. இதனால் ஆட்டோவில் இருந்த சையது அலி காயம் அடைந்தார். மேலும் ஆட்டோவும் சேதம் அடைந்தது. மற்றொரு ஆட்டோ அப்போது அந்த வழியாக பயணிகளை இறக்கி விட்டு கடசனகொல்லியில் இருந்து தேவர்சோலைக்கு அருண் மோகன் என்பவர் தனது ஆட்டோவை ஓட்டி வந்தார். அவர், மற்றொரு ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை கண்டு தனது ஆட்டோவை நிறுத்தினார்.
அந்த சமயத்தில் மீண்டும் அங்கு வந்த காட்டுயானை அவரது ஆட்டோவை தாக்கியது. இதில் முகப்பு கண்ணாடி நொறுங்கியது. இதற்கிடையில் அருண் மோகன் அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டியடித்தனர். அத்துடன் தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது வனத்துறையினரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் சேதமடைந்த ஆட்டோக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுயானை ஊருக்குள் வராமல் இருக்க சோலார் மின்வேலி அமைக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இது போன்று பந்தலூர் அருகே செம்பக்கொல்லி பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு காட்டுயானை ஒன்று புகுந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் உள்ளேயே முடங்கினர். இதற்கிடையில் அங்குள்ள மின்கம்பத்தை காட்டு யானை முட்டி சாய்த்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு வீடுகள் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அய்யன்கொல்லி மின்வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டனர். காட்டுயானையின் நடமாட்டத்தை சேரம்பாடி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.