தமிழக செய்திகள்

மலைப்பாதையில் காட்டு யானை உலா - ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்

சாலையோரம் நின்றிருந்த யானை அருகே சுற்றுலா பயணிகள் சென்று ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தனர்.

நீலகிரி,

சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீலகிரி மலைப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகள் குன்னூர், கோத்தகிரி மலைப்பாதைகளில் நடமாடி வருகின்றன.

இதனை வனத்துறையினர் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது காட்டு யானைகள் சாலையோரத்தில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில் நேற்று குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று நடமாடியது.

அப்போது சாலையோரம் நின்றிருந்த யானை அருகே சுற்றுலா பயணிகள் சென்று ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தனர். இதனால் ஆக்ரோஷம் அடைந்த யானை துதிக்கையை உயர்த்தி எச்சரிக்கை செய்தது. பின்னர் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே சென்று சுற்றுலா பயணிகள் அத்துமீறுவதை வனத்துறையினர் கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.