நீலகிரி,
கூடலூர் நகருக்குள் உலா வரும் காட்டு யானையால் நிம்மதியை இழந்த மக்கள் தீப்பந்தம் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நீலகிரி காவட்டம் கூடலூர் நகருக்குள் காட்டு யானை ஒன்று முகாமிட்டு வருகிறது. மேல் கூடலூர், கெவிப்பாரா, அரசு மேல்நிலைப்பள்ளி, செம்பாலா, கோத்தர்வயல், மார்த்தோமா நகர், புத்தூர்வயல் என நகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குடியிருப்புகளை தினமும் முற்றுகையிட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல் வீடுகளில் பராமரிக்கப் பட்டு வரும் வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களையும் தின்று பழகி விட்டதால் காட்டு யானையை வனத்துறையினர் விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடலூர் மரப்பாலம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் காட்டு யானை நுழைந்தது.
நாள்தோறும் காட்டு யானையால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாக பொதுமக்கள் தங்களது வேதனையை தெரிவித்தனர். மேலும் அதை விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வருவதால் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை தீப்பந்தம் மூலம் பொதுமக்கள் விரட்டினர். இதனால் யானை அங்கிருந்து சென்றது.
இதேபோல் செம்பாலாவிலும் காட்டு யானை நுழைந்து பொதுமக்கள் வீடுகளை சுற்றி அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது. தினமும் குடியிருப்பு பகுதியில் வளைந்து பாதுகாப்பு சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புகளை காட்டு யானை சேதப்படுத்துகிறது. எனவே வனத்துறையினர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.