நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மலைச்சரிவு பகுதியான பர்லியார், கல்லார் ஆகிய வனப்பகுதிகள் யானைகளின் வாழ்விடங்களில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் சமவெளி பகுதிகளில் இருந்து யானைகள் கூட்டமாக முகாமிட்டு உள்ளது. குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை வறட்சியின் காரணமாக காட்டு யானைகள் இந்த பகுதிக்கு படையெடுக்கின்றன.
மேலும் யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் இங்கு உள்ளதால் மலைப்பாதையில் அவ்வப்போது உலா வருகின்றன. நேற்று முன்தினம் இவ்வாறு சாலையில் உலா வந்த யானைகள் நீண்ட நேரம் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு யானைகள் சென்றதால், போக்குவரத்து சீரானது.
இந்த நிலையில் நேற்று 11 யானைகள் குன்னூர்-ரன்னிமேடு இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் முகாமிட்டு இருந்தன. இதை அறிந்த வனத்துறையினர் யானைகளை சமவெளி பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் யானையை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக யானைகள் ஆற்றை கடந்து தேயிலை தோட்டங்கள் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் முகாமிட்டன. அவற்றை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைகள் மேட்டுப்பாளையம் சாலையை கடக்கும்போது வாகன ஓட்டிகள் அருகில் செல்ல வேண்டாம். குறிப்பாக செல்பி, புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம். யானைகள் சில நேரங்களில் மனிதர்களை விரட்டி வந்து தாக்கும் அபாயம் உள்ளது. சாலையில் யானைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.