தமிழக செய்திகள்

சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதா.? - சீமான் கண்டனம்

விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

“சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காத மாற்று மின்பெருக்கத்திற்கு நாடும், மக்களும் முழுவதுமாக மாறவேண்டும் என்பதுதான் நாம் தமிழர் கட்சியின் முதன்மையான கொள்கை என்ற போதிலும், விளைநிலங்களை அழித்து, அதன் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்க முயல்வதை எதன் பொருட்டும் ஆதரிக்க முடியாது. நிலம், நீர், காற்று உள்ளிட்ட சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி ஆலைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதன் நோக்கமே, மக்களின் நல்வாழ்வின் உயிர்நாடியான வேளாண்மையையும், வேளாண் நிலங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். எனவே, அந்த உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் விதமாக வேளாண் நிலங்களை அழித்து அந்த இடத்தில் மீது சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலை அமைப்பதை அனுமதிக்க முடியாது. அதிலும் திருவாரூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வரும் நிலையில், அங்கு 200 ஏக்கர் விளைநிலங்களை அழிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதித்தது எப்படி? அரசு அனுமதிக்கவில்லையெனில் முறைகேடாக அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்? இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் ஏற்கனவே காலநிலை மாற்றம், பருவ மழை பொய்ப்பு, பாசன நீர் இன்மை, உரத்தட்டுப்பாடு, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் வேளாண்மையை விட்டே வெளியேறி, விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, மேலும் மேலும் விளைநிலங்களை அழிக்க அனுமதிப்பது நியாயம்தானா? இதுதான் விளைநிலங்களையும், வேளாண்மையையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் முறையா? அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் சுற்றுப்புற வெப்பத்தைக் குறைக்கக்கூடியவை. அதற்கு மாறாக சூரிய ஒளி மின் உற்பத்தி மையமோ சுற்றுப்புற வெப்பத்தை அதிகரிக்கும் தன்மைகொண்டவை. ஆகவே, விளைநிலங்களை அழித்து அமைக்கப்படும் சூரிய ஒளி மின் ஆலைகள் சுற்றுப்புற வெப்பநிலையை அதிகரித்து உள்ளூர் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலைகளுக்குச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கோரிக்கையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகக் குறைக்கும், பெரிய அளவிலான சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்களை விளை நிலங்கள் மீதோ, அதன் அருகிலோ அமைத்திட ஒருபோதும் அனுமதிக்காது, தரிசு நிலங்களில் மட்டுமே அமைத்திட வேண்டும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் 200 ஏக்கர் விளைநிலங்களை அழித்து, தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையம் அமைக்கப்படுவதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.