சென்னை,
மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம் என்றும், ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது என்றும் அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார்.
சட்டசபையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் நித்தியானந்தன் (பொள்ளாச்சி, கொ.ம.தே.க.) பேசும்போது, 'கேரளாவில் கொப்பரை தேங்காயை சமையல் எண்ணெயாக தயாரித்து விற்பனை செய்வது போன்று கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு பில் போடுவதில் சிரமம் இருக்கிறது. ஏழை எளிய மக்களை ஆராய்ந்து அவர்களுக்கான ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு அமைச்சர் வெங்கடரமணன் பதில் அளித்து கூறியதாவது:-
ரேஷன் கடைகளில் பில் போடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று உறுப்பினர் சொல்லி இருக்கிறார். சர்வரை மேம்படுத்தி வருகிறோம். எனவே இதுபோன்ற பிரச்சினைகள் வருங்காலங்களில் இருக்காது.
ரேஷன் கடைகள், அம்மா உணவகங்கள், அங்காடி மையங்கள், மருத்துவமனைகள், தங்கும் விடுதிகள் போன்ற திட்டங்களுக்காக மாதம் 2 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்கிறோம். ஆண்டுக்கு 24 கோடி லிட்டர் தேவைப்படுகிறது.
தேங்காய் எண்ணெயை ஒரு மாதம் கொடுத்துவிடலாம். அடுத்த மாதம் கொடுக்க முடியாமல் போய்விடும். ஒரே சீராக கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் வேறு எண்ணெயை மாற்ற முடியவில்லை. வருங்காலங்களில் வேறு எண்ணெய்கள் கிடைத்தால் கண்டிப்பாக வழங்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.