சென்னை,
ஆவின் பொருட்களின் விலை உயர்வுக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பொறுப்புத் தலைவர் அச. உமர் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடுமையான விலைவாசி உயர்வு, பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் அன்றாட வாழ்வை நடத்தவே சாமானிய மக்கள் திணறி வரும் சூழலில், ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது சற்றும் ஏற்புடையதல்ல. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் தலையில் மேலும் ஒரு பெரும் நிதிச்சுமையைச் சுமத்தும் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
குறிப்பாக, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்கள் நெருங்கி வரும் இவ்வேளையில், இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்யப் பயன்படும் பால் சார்ந்த பொருட்களின் விலையை அதிகரித்திருப்பது பொதுமக்களைக் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் மக்களுக்குச் சலுகைகளை வழங்கிச் சுமைகளைக் குறைக்க வேண்டிய தமிழக அரசு, மாறாக அரசு நிறுவனத்தின் மூலமாகவே விலையை உயர்த்தி மக்களை வதைப்பது அநீதியானது.
தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்விலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுத்துறை நிறுவனமான ஆவின், தனியார் நிறுவனங்களுக்கு இணையாகத் தொடர்ந்து விலையை உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழக அரசு எளிய மக்களின் நலனையும், நெருங்கி வரும் பண்டிகைக் காலத்தையும் கருத்தில் கொண்டு, ஆவின் பொருட்களின் இந்த விலை உயர்வை உடனடியாகவும் முழுமையாகவும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.