சென்னை,
தமிழகத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக செயல்படுவதில்தான் விருப்பம் எனத் தெரிவித்திருக்கும் நிலையில், திமுகவின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்பில் அதிமுக பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விசிக, இடதுசாரிகள் தனித்தனியே அவர்கள் கட்சி செயற்குழுக் கூட்டங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திமுக தலைவர் ஸ்டாலினும் ஆலோசனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுகவுக்கு திமுக ஆதரவளிக்குமா? என்ற ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்துள்ளார்.
"இது சாத்தியம் இல்லை என்று நான் நம்புகிறேன். ஏனெனில், தமிழ்நாட்டில் திமுகவும் அதிமுகவும் பரம எதிரிகளாக இருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பதை இன்று இரவுக்குள் விசிகவும், இடதுசாரிகளும் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், சென்னையில் திமுக எம்.பி,. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் தீர்ப்பு அளித்துவிட்டனர். ஜனநாயகத்தில் இதுதான் மிக முக்கியமான விஷயம்.
மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் மக்கள் தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும். அதிமுக - திமுக கூட்டணி என வரும் ஆதாரமற்ற செய்திகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.