சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகா ரம் உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத்தருவதாகக்கூறி கட்சி நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்றதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பி.டி.அரசகுமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக் குமார், சரவணன் ஆகியோர் சரணடைந்துள்ளனர்.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டு நீதிபதி வி.லட்சுமிநாராயணனிடம், அன்பில் மகேஷ் தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதி, ஜாமின் கோரும் மனுவுக்கு எண்ணிடும் பணிகள் முடிந்தால் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படும் என்றார். அதேபோல, அன்பில் மகேஷ் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய் துள்ள மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.