தமிழக செய்திகள்

ஆர்.ஏ.புரம் அரசு இல்லத்துக்கு மாறுகிறாரா முதல்-அமைச்சர் விஜய்? பொதிகை வளாக வீட்டில் புனரமைப்பு

முதல்-அமைச்சர் விஜய் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.

சென்னை,

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் மாறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதிகை வளாகத்தில் உள்ள அந்த வீடு புனரமைக்கப்பட்டு வருகிறது.

நீண்ட பயணம்

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சரான பிறகு விஜய், நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து தினமும் சென்னை தலைமைச்செயலகத்திற்கு வந்து செல்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு சில சமயங்களில் மட்டுமே. அலுவலக வேலைக்காக சென்று தங்கி வருகிறார். அதை அவர் முகாம் அலுவலகமாக பயன்படுத்துகிறார்.

நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வருவது நீண்ட நேர பயணமாக உள்ளது. வரும் வழியில் பல இணைப்பு சாலைகள் உள்ளன. எனவே அந்த பகுதிகளை கடக்கும் போது, பாதுகாப்பு அளிப்பதற்காக சாலை போக்குவரத்தை நிறுத்தி வைக்க வேண்டியதுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

தேர்வான அரசு இல்லம்

தன்னால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. எனவே தலைமைச் செயலகத்துக்கு அருகே தங்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் தங்கி இருக்கும் வீடுகள் அமைந்துள்ள ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், அரசு இல்லத்தை அதிகாரிகள் தேடி வந்தனர்.

இந்தநிலையில் அங்கு தொல்காப்பிய பூங்காவுக்கு எதிரேயுள்ள பொதிகை வளாகத்தில் உள்ள அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அது, முன்னாள் தலைமைச்செயலாளர் இறையன்பு வசித்த வீடாகும். ஏற்கனவே பாதுகாப்புக்குள்ளான பகுதி என்பதாலும், தலைமைச்செயலகத்துக்கு உடனே சென்று வரும் வசதி இருப்பதாலும் அந்த வீட்டை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.

விஜய் முடிவு?

காலியாக இருந்த அந்த வீட்டை புனரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், போலீஸ் அதிகாரிகளும் அந்த இல்லத்தை சென்று பார்வையிட்டு உள்ளனர். அந்த வீட்டின் சுற்றுப்புற சூழல், பாதுகாப்பு. போக்குவரத்து வசதி உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வீட்டை புனரமைத்த பிறகு அதை முதல்-அமைச்சர் விஜய்யிடம் காட்ட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதை பார்த்த பிறகு முதல்-அமைச்சர் விஜய் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT