தமிழக செய்திகள்

வாய்ப்பு கொடுத்தால் சட்டசபை தேர்தலில் போட்டி: ஓ.பன்னீர் செல்வம் பேட்டி

இனி எந்த காலத்திலும் வெல்ல முடியாது. சர்வாதிகாரி பழனிசாமி என ஓ.பன்னீர் செல்வம் காட்டமாக கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவில் தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு இணைத்துக்கொண்டுள்ளேன். திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன். திமுக வளர்ச்சிக்கு தொண்டனாக பாடுபடுவேன். பாசத்தோடு அரவணைத்த தளபதிக்கு நன்றி.

திராவிட இயக்கம், கொள்கையை காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் அரசியல் பண்பாடு கொண்டவர் ஸ்டாலின். தமிழக மக்களுக்கு ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை அளித்து வருவதை நாடு கவனிக்கிறது. பெண்கள் சிரமமின்றி குடும்பத்தை வழிநடத்த அனைத்து உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார். திராவிட இயக்கத்தை, சித்தாந்தத்தை கட்டிக்காப்பதில் முன்னணித்தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார்.

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சர்வாதிகாரியாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி என்றும் வெல்ல முடியாத சூழலை உருவாக்கி உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவி ஏற்றது முதல் தற்போது வரை அதிமுகவை அழிவுப்பாதைக்குத்தான் அழைத்து செல்கிறார். பழனிசாமிக்கு தலைமைப்பண்பு இல்லை. தென்மாவட்டத்திலிருந்து எந்த ஒரு தலைவரும் மேலே வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர், வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வரலாற்றில் பதிவானது.

ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்,