தமிழக செய்திகள்

பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடியா? - வேளாண் அமைச்சர் புதிய தகவல்

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

தேர்தல் வாக்குறுதி

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், கூட்டுறவு வங்கி களில் வாங்கிய பயிர்க்கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என, த.வெ.க., தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.

பயிர்க்கடன் தள்ளுபடி

தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதல்-அமைச்சரான நிலையில், கூட்டுறவு வங்கிகளில், 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு முழு தள்ளுபடியும், 75,000-க்கு மேல் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு, 35,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதிய தகவல்

இந்த நிலையில், பயிர் கடன் தள்ளுபடி குறித்து புதிய தகவல் ஒன்றை வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பேட்டியளித்த அவர்,தமிழகத்தில் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்கள் அனைவரும் பயனடையும் வகையில் புதிய வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த அரசை போல தவெக அரசிலும் தனி பட்ஜெட்டாகவே வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று அவர் தெரிவித்தார்.