தமிழக செய்திகள்

துரைமுருகனுக்கு இனி அமைச்சர் பதவி கிடையாதா? - தி.மு.க.வில் பரபரப்பு

அமைச்சர் துரைமுருகனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் வீட்டில் கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அவருடைய வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இந்த முறை சட்டசபை தேர்தலில் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் தி.மு.க. வட்டாரத்தில் பரவியது. ஏற்கனவே, 4 அமைச்சர்களுக்கு சீட் கிடையாது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை துரைமுருகன் அவரிடம் தெரிவித்துள்ளார்.

இதுவரை ராணிப்பேட்டை மற்றும் காட்பாடி தொகுதியில் இருந்து 10 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துரைமுருகன், 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வெற்றி பெற்று வந்துள்ளார். தி.மு.க. ஆட்சி காலத்தில் பலமுறை அமைச்சராகவும் இருந்துள்ளார். எனினும், கடந்த (2021) தேர்தலில் 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலேயே காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார்.

நீண்ட நெடுங்காலம் அமைச்சராக இருந்து வரும் துரைமுருகனுக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படாது என்ற தகவல் தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில், கடைசியாக இந்த ஒருமுறை மட்டும் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

எனினும், தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அமைச்சர் பதவி எதுவும் அவருக்கு வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் துரைமுருகனிடம் தெரிவிக்கப்பட்டபோதும், அவரிடம் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.