தமிழக செய்திகள்

மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்கப்படுமா? - முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல், என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அந்த வகையில், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் பி.எம்.டபிள்யூ., டி.வி.எஸ்., ஹட்சன் (BMW, TVS, Hudson) உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், வேளாண் துறை மற்றும் நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் வேளாண்மை, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரி நதிநீர், மேகதாது அணை விவகாரங்கள், ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது, நீர்நிலைகளை தூர்வாருதல், குறுவை சாகுபடி, பயிர்க்காப்பீடு உள்ளிட்டவை குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள், மேகதாது அணை விவகாரம் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார்.