தமிழக செய்திகள்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய மாற்றங்கள் செய்யப்படுமா?

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய மாற்றங்கள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை நடைபெறுகிறது. நாளை மறுநாள் அக்னி சட்டி எடுக்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த 2 நாட்களிலும் தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்வதுண்டு. இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றை ஆங்காங்கே நிறுத்துவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளதால் வாகனங்களை நிறுத்த தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நடுநிலைப்பள்ளி திடலை ஏற்பாடு செய்யலாம். இதேபோன்று பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெளியூர் செல்லும் பஸ்களை கடந்த காலங்களை போல மின்வாரிய அலுவலகம் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகில் மற்றும் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள இடங்களை ஒதுக்கீடு செய்தால் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும். சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்காது. திருவிழாவுக்கு வரும் பக்தர்களும், கோவிலுக்கு இடையூறு இல்லாமல் சென்று வர வாய்ப்பு ஏற்படும். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதுகுறித்து கலந்தாய்வு செய்து உரிய மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும். இதுகுறித்து முறையாக அறிவிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.