சென்னை,
காங்கிரஸ், வி.சி.க. முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள் ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டணி அரசை நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் விஜய் அரசுக்கு அறுதிப் பெரும் பான்மை இல்லை. மொத்தம் 107 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளார்கள். அதனால் காங்கிரஸ், வி.சி.க. முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள் ஆகியவற்றின் ஆதரவுடன் கூட்டணி அரசை நடத்தி வருகிறார். இதில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் அரசில் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்து மட்டும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் அரசை கடுமையாக விமர்சனங்களும் செய்து வருகின்றன.
ஆகவே அவர்கள் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆதரவை அவர்கள் வாபஸ் பெற்றுவிட்டால் அந்த இடத்தை நிரப்ப பா.ம.க.வை சேர்த்துவிட த.வெ.க. முயன்று வருவதாக கூறப்பட்டது. ஆனால் சவுமியா அன்புமணிக்கு துணை முதலமைச்சர் பதவி வேண்டும் என பா.ம. க. சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அதனால்தான் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பா.ம.க. நடுநிலை வகித்ததாகவும் இதன் மூலம் த.வெ.க.வுக்கு ரகசிய ஆதரவை வழங்கியதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பா.ம.க. வந்தால் அந்த இடத்தில் வி.சி.க. நிச்சயம் இருக்காது என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் கூறினார். அதேபோல அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிடுவேன் என்று வன்னி அரசும் கூறினார். இந்த இருவரின் பேச்சுகளும் த.வெ.க. தலைவர்களை மறுபரிசீலனை செய்ய தூண்டி இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ம.க.வை சேர்ப்பது மூலம் கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பம் நேரிடும் என முதல்-அமைச்சர் விஜய் கருதுகிறார். ஆகவே அவர் இந்த விவகாரத்தில் கடும் முடிவுகளை எடுக்க தயக்கம் காட்டத் தொடங்கி உள்ளார். இடைத்தேர்தல் மூலமே மெஜாரிட்டியை பெற்று விடலாம் என்றும் கருதுகிறார். ஏற்கனவே 2 தொகுதி இடைத்தேர்தலில் வென்றுவிட்டதால், த.வெ.க.வின் பலம் 109 ஆக உயர்ந்து விட்டது.
இன்னும் 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்க வேண்டும். அவற்றி லும்வென்று விடலாம் என விஜய் கருதுகிறார். அப்படி வெற்றி வாகை சூடிவிட்டால் த.வெ. க.வின் பலம் 114ஆக உயர்ந்துவிடும். அந்த கட்டத்தில் ஒருசில கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றாலும் அரசுக்கு ஆபத்து நேராது. அதுமட்டுமல்லாது அ.தி.மு.க.வில் இருந்து இன்னும் 10 முதல் 15 எம்.எல்.ஏ.க்கள் வரை ராஜினாமா செய்துவிட்டு த. வெ.க.வில் இணைய இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அந்தத்தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்து வெற்றி பெற்றுவிட்டால் த.வெ.க.வுக்கு மட்டுமே 118-க்கு மேல் எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துவிடுவார்கள். அந்த வகையில் எந்தவொரு கட்சியின் தயவும் இல்லாமல் முதல்வர் விஜய்யால் தனியாகவும் ஆட்சியை நடத்த முடியும். எனவே இடைத்தேர்தல்கள் மூலமே பெரும்பாண்மையை பெற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.