தமிழக செய்திகள்

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி ஒரு வார்த்தை கூறுவாரா.? - அன்புமணி கேள்வி

அணை கட்டக் கூடாது என ராகுல்காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுகிறேன் என அன்புமணி கூறினார்.

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

கர்நாடக அணையில் இன்றைக்கு 62 டிஎம்சி தண்ணீர் இருக்கிறது. ஆனால், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, கடந்த மாதத்தில் இரு முறை அறிவுறுத்தியபோதிலும், அவர்களிடம் நீர் இல்லை என்று கூறினர். மேகதாது அணை கட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகத்தில் தண்ணீர் இருந்தும் தமிழகத்துக்குத் தர மறுக்கும்நிலையில், அணை கட்டியபிறகு குடிப்பதற்குக்கூட தண்ணீர் கிடைக்காது. ஆகையால், தமிழக முதல்வர் விஜய் கர்நாடகத்துக்கு செல்லக் கூடாது.

முதலமைச்சர் விஜய், கர்நாடகா சென்று, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து பேசிவிட்டு, மேகதாது அணை கட்டும் பகுதியை பார்வையிட்டால், அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய ஒரு பாதகமாக இருக்கும்.

மேகதாது அணையை, தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளவில்லை, அங்கீகரிக்கவில்லை. அவ்வாறு அங்கீகரிக்காத ஒன்றுக்காக, பேச்சுவார்த்தை நடத்துவதில், எந்த அர்த்தமும் கிடையாது. அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை, மத்திய அரசிடம், பிரதமர் மோடியிடம் நடத்த வேண்டும்.

மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள். அவரிடம் வலியுறுத்த நாங்கள் தயாராக உள்ளோம். அதேபோல, மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தியிடம் சொல்ல மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா?

மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல்காந்திக்கு அழுத்தம் தர மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கா? கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டக் கூடாது என ராகுல் காந்தி சொன்னால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து நான் விலகி விடுகிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.