தமிழக செய்திகள்

சட்டசபையில் இன்று அனல் பறக்குமா?: முதல்-அமைச்சர் விஜய் பதிலுரை

சட்டசபையில் அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

சென்னை,

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) கூடும் சட்டசபையில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்க இருக்கிறார்.

சட்டசபை மீண்டும் கூடுகிறது

சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த 4, 5 மற்றும் 6-ந்தேதி என 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. விடுமுறைக்கு பிறகு சட்டசபை இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரம் இன்று கிடையாது என ஏற்கனவே சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துவிட்ட நிலையில், அரசினர் சட்டத் திருத்த மசோதா அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.

அனல் பறந்த சட்டசபை

இதுவரை 18 நாட்களாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், முக்கிய நிகழ்வாக கடந்த 3-ந் தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பேசியதால் சட்டசபையில் அனல் பறந்தது.

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "த.வெ.க. அரசு அமைந்த 116 நாட்களில் தமிழ்நாடு ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசின் அறிவிப்புகளை எல்லாம் பார்க்கும்போது, எல்லா திட்டத்திற்கும் மொத்தமாக சேர்த்து தாய்மாமன் காதுகுத்து திட்டம் என்று பெயர் வைத்திருக்கலாம்.

கடந்த 116 நாட்களில் சுமார் 550 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதில், 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள், 10 ஆணவக் கொலைகள் அடங்கும். எங்களுடைய கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்" என்று கூறினார்.

யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன" என்று பேசினார்.

முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, இடையே எழுந்து பேசிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், "உறுப்பினர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் அதற்கான தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை (இன்று) அளிக்கிறேன்.

தற்போது நான் இங்கே இல்லை என்றாலும் யார்-யார் என்ன கேள்விகள் கேட்கிறார்கள் என்ற தகவல் எனக்கு வந்துவிடும். எல்லாவற்றிற்கும் தெளிவான பதிலை சொல்வேன். தற்போது உங்கள் சார்பாக அவர்களிடம் உத்தரவாதம் ஒன்றை கேட்கிறேன். அப்போது அவர்கள் (தி.மு.க.) யாரும் எழுந்து ஓடிவிடக்கூடாது" என்று கூறிவிட்டு சட்டசபையை விட்டு வெளியேறிவிட்டார்.

சட்டசபையில் இன்றும் அனல் பறக்குமா?

இந்த நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேச இருக்கிறார். குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளிக்க இருப்பதால், சட்டசபையில் இன்றும் அனல் பறக்கும் என்று தெரிகிறது.

எதிர்பார்ப்பு

அந்த வகையில் முதல்-அமைச்சர் விஜய் என்ன மாதிரியான பதிலை சொல்லப்போகிறார்? ஏற்கனவே இந்த துறைகளுக் கான அறிவிப்புகளை வெளியிட்டுவிட்ட நிலையில், மேலும் புதிய அறிவிப்புகளை எதுவும் வெளியிடுவாரா? என்பது போன்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு இன்று காலை பதில் கிடைத்துவிடும்.

முதல்-அமைச்சரின் பதிலுரையைத் தொடர்ந்து, வனத்துறை, வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு, சுற் றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைகளின் மானியக் கோரிக்கை அறிவிப்புகள் மற்றும் அதன் மீதான விவாதங்களும், அதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் பதிலுரையும் இருக்கும்.

SCROLL FOR NEXT