தமிழக செய்திகள்

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருமா..? பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் பதில்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (டாப்ஸ்) தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.

சென்னை,

'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு

தமிழக சட்டசபையில் நேற்று பொதுப்பணித்துறை உள்ளிட்ட சில துறைகளின் மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர் அப்போது பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. எ.வ.வேலு, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசு ஊழியர்கள் சங்கங்கள், முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழாவே நடத்தினார்கள்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்

தேர்தல் வந்ததும், த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையில் 25-வது பக்கத்தில், பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்துதல் என்ற தலைப்பில், தி.மு.க. அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துவிட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கேற்ப முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டம் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்.

மூன்று விஷயங்கள்

இப்போது அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் தொடருமா? அல்லது பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொடுக்கப்போகிறதா? என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று கேட்டார்.

அவருக்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அளித்த பதில் வருமாறு:-

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (டாப்ஸ்) தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. அந்த திட்டம் தொடர்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட் டது. அந்தக் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தது. அதில் மூன்று விஷயங்கள் முக்கியமானவை.

விஜய் நிறைவேற்றுவார்

அந்த மூன்று விஷயங்களையும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக முதல்-அமைச்சர் விஜய் நிறைவேற்றுவார். குழு பரிந்துரை செய்த மூன்று விஷயங்கள் என்னவென்றால், கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதம் என்ற அடிப்படையில், அது கண்டிப்பாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இரண்டாவதாக, பணிக்கொடை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்கள். அதுவும் இருக்கும். மூன்றாவதாக, குடும்ப ஓய்வூதியம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள். இதில் நாங்கள் தற்போது அதற்கான விதிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

நடைமுறைக்கு வரும்

அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டிகள் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. அதன்படி 'டாப்ஸ்' திட்டம் விரைவாக, கூடிய சீக்கிரத்தில் நடைமுறைக்கு வரும். மீண்டும் ஒருமுறை சொல்கிறேன், 'டாப்ஸ்' என்பது கண்டிப்பாக வரப்போகிற நாட்களில் தயார்படுத்தப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.