சென்னை,
தமிழகத்தில் சென்னை சென்டிரல் - மைசூரு, சென்னை சென்டிரல் - கோவை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றதால், பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் - தூத்துக்குடி, தஞ்சாவூர் - மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்களை இயக்கலாம் என்று ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே பரிந்துரை வழங்கியுள்ளது.
ஏற்கனவே, சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே பரிந்துரைத்ததன் அடிப்படையில் ரெயில்வே வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது அந்த வழித்தடத்தில் 130 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - ராமேஸ்வரத்திற்கு இடையே வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியதும், அடுத்து சென்னை - தூத்துக்குடி, தஞ்சாவூர் - மைசூரு இடையே வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.