மு.க.ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? மு.க.ஸ்டாலின் பதில்

அம்பை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை மற்றும் பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் பணிகளை முடித்துவிட்ட சூழலில், ஐகோர்ட் தீர்ப்பு வந்த பின் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. திருச்சி கிழக்கு தவிர்த்து மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுகவில் இருந்து வந்த இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு தான் தவெக வாய்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் போட்டி

தவெகவை வீழ்த்த எதிர்க்கட்சிகளும் தற்போதே வியூகம் வகுக்க தொடங்கியுள்ளன. இந்தநிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ளார். அம்பை இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மற்ற கட்சிகள் உங்களை ஆதரித்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று செய்தியாளர்கள் சீமானிடம் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த சீமான், "சோறு கிடைக்காதா என்ற நிலையில் பசியில் இருக்கிறோம். அப்போது பிரியாணி தருகிறேன் என்று சொன்னால், வேண்டாம் என்று கூறுவார்களா?. நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.

மு.க.ஸ்டாலின் பதில்

இதனால், அம்பை தொகுதியில் சீமான் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம், சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிவிக்கட்டும் . அதன்பிறகு பேசலாம் “ என்று கூறினார்.

SCROLL FOR NEXT