சென்னை,
தமிழ்நாடு நாளிலாவது, தமிழுக்கே முதலிடம் என்பதை அரசு உறுதி செய்யுமா? என்றும் பெயர்ப்பலகை விதியை, தமிழ்நாடு அரசு முழுமையாக அமல்படுத்துமா? என்றும் வேல்முருகள் கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நவம்பர் 1 ஆம் தேதியைப் பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு நாளில், தமிழ்நாட்டின் பொது வெளியில் தமிழுக்கு உரிய முதலிடம் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில், நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தமிழுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்கனவே தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்ற வேண்டும் என இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
எனவே, இந்தத் தமிழ்நாடு நாளில், பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு நாள் என்பது வெறும் விழாவாக மட்டும் அமையக் கூடாது. தமிழின் உரிமை, தமிழர்களின் அடையாளம், தமிழ்நாட்டின் தனித்துவம் ஆகியவற்றை நடைமுறையில் நிலைநாட்டும் நாளாகவும் அமைய வேண்டும்.
தமிழ்நாட்டின் அனைத்துப் பெயர்ப்பலகைகளிலும் “தமிழ் முதலில்” என்ற நிலையை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.