தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்படுமா...? - உச்சக்கட்ட பரபரப்பு

மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

கார்த்திகை தீபம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் 24-ந்தேதி (அதாவது இன்று) தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்ட நிர்வாகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த 20-ந்தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால் இன்றைக்கும் சீராய்வு மனு விசாரணைக்கு வரவாய்ப்பில்லை. இதனால் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படலாம். இருப்பினும் சீராய்வு மனு நிலுவையில் இருப்பதை கூறி அதில் முடிவு வரும் வரை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தள்ளிப்போடவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக திருப்பரங்குன்றம் பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5,618 போலீசார் பாதுகாப்பு பணி

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மலை அடிவாரம் முதல் உச்சி வரை மலைப்பகுதிக்கு மட்டும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உள்பட 1,774 போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தை கண்டறிய அதிநவீன வகையில் முகத்தை கண்டறியும் கேமராக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் தீப விழாவுக்காக 12 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், 5 கூடுதல் சூப்பிரண்டுகள், 57 துணை சூப்பிரண்டுகள், 132 இன்ஸ்பெக்டர்கள், 2,885 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2,524 போலீஸ்காரர்கள் என மொத்தம் 5,618 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை உச்சியில் தீபத்தூண் பகுதியில் மட்டும் 187 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோல், தர்கா அமைந்துள்ள பகுதியில் 190 போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். திருப்பரங்குன்றம் முழு பகுதியும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

ரத்து செய்யக்கோரி வழக்கு

இதற்கிடையில் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராகியுள்ளனர்.

வீட்டு காவலில்...

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் எதிரொலியாக நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டைச் சுற்றிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபமேற்றும் நிகழ்வுக்கு செல்லவிருந்த நிலையில் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதைபோல மேட்டுப்பாளையம் முகாம் அலுவலகத்தில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர்.எல்.முருகன் அவர்கள் அன்னூர் பேருந்து நிலையம் அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

தொல்லியல் துறை ஆய்வு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல அலுவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தீபம் ஏற்றப்படுமா?

இவ்வாறு இன்று மாலை தீபம் ஏற்றப்போவது தீப மண்டபமா? தீபத் தூணா? என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சக்கட்ட பரபரப்பு திருப்பரங்குன்றத்தில் நிலவி வருகிறது. இதற்கிடையே உச்சிப்பிள்ளையார் கோவிலில் 70 கிலோ எடையில் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட தாமிர தீப கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT