சென்னை,
முதலில்.. கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக அதிரடி காட்டிய அண்ணாமலை, பிறகு.. பா.ஜ.க.வில் இணைந்து ஒரே ஆண்டில் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை வந்த பிறகுதான், தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியடையத் தொடங்கியது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பொதுவாக, தேசிய கட்சிகள், தமிழக பிரச்சினைகளில் உள்ளார்ந்து தலையிட்டு கருத்து சொல்வது கிடையாது என்ற நிலை இருந்தது.
ஆனால், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு, தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக அதிரடி கருத்துகளை தெரிவிக்கத் தொடங்கியதால், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல எழுச்சி இருந்தது.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்ட நிலையில், தோல்வியை சந்தித்தன. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்ததால், அதற்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்ததே காரணம் என்றும் கருத்து தெரிவித்தனர்.
அ.தி.மு.க.வினரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு, அண்ணாமலையும் உடனுக்குடன் பதில் அளித்ததால், ஒரு கட்டத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உடைந்தே போனது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிட்டன. அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தபோதும், பா.ஜ.க.வின் வாக்கு வங்கி தமிழகத்தில் அதிகரித்து இருந்தது.
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரசை பின்னுக்கு தள்ளி பா.ஜ.க. 11 சதவீதம் அளவுக்கு வாக்குகளை பெற்றது. இதற்கு அண்ணாமலையின் அதிரடி பேச்சு இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியதே காரணமாக சொல்லப்பட்டது.
ஆனால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஒரு ஆண்டுக்கு முன்பே மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை பா.ஜ.க. தொடங்கியபோது, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வைத்த ஒரே கோரிக்கை, அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான்.
அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. சம்மதித்தது. பா.ஜ.க.வில் அண்ணாமலையும் பின்னுக்கு தள்ளப்பட்டார்.
மற்றொரு பக்கம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் முதல் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வந்தது. மக்களை சந்திக்க விஜய் சென்ற இடங்களில் எல்லாம், கூட்டம் ஆர்ப்பரித்தது. இது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கும், ஆண்ட கட்சியான அ.தி.மு.க.வுக்கும் கிலியை ஏற்படுத்தின.
கடைசியில் தேர்தல் முடிவும் இரு திராவிட கட்சிகளுக்கும் பயத்தை ஏற்படுத்தியதுபோல் அமைந்துவிட்டது. முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து, த.வெ.க.வும் கூட்டணி பலத்துடன் ஆட்சி அரியணையில் ஏறிவிட்டது.
தற்போது, புதிய முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடையப் போகிறது. இந்த ஒரு மாதத்தில், 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 2 மாதம் 200 யூனிட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் வரையிலான சிறு, குறு விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. லஞ்ச லாவண்யம் அறவே இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் பார்வையும், தமிழக மக்களின் பார்வையும் த.வெ.க. அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வை விட்டு விலகி, அண்ணாமலையும் புதிய இயக்கத்தை தொடங்கியிருக்கிறார்.
இளைஞர்களை மையப்படுத்தி தொடங்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தில், இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர். அந்த அளவுக்கு அண்ணாமலையின் இயக்கம் எழுச்சி பெற்றுள்ளது. இதுவும் இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே பொறுப்பு வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்து இருப்பது தமிழக அரசியலில் புதிதாக பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் வருகை த.வெ.க.வின் வளர்ச்சியை பாதிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்படுவதாக அண்ணாமலை கூறியிருப்பதால், அந்தத் தேர்தலில் விஜய் - அண்ணாமலை இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை திராவிட கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. எப்படி எதிர்கொள்ளப்போகின்றன? என்ற கேள்வியும் இப்போதே எழுந்துள்ளது.
இனி, த.வெ.க. ஆட்சியின் ஒவ்வொரு நகர்வுகளும், அண்ணாமலையின் அடுத்த கட்ட முயற்சிகளுமே யார் முன்னுக்கு வருவார்கள்? என்பதை தீர்மானிக்கும்.