சென்னை,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் நுரை அல்ல. தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் ஆகியவற்றின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை மணி.
தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் உருவாகித் தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது. நீண்ட காலமாக, கர்நாடகப் பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவதாக, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் முதலில் பாதிக்கப்படுவது தமிழக விவசாயிகள்தான். அதனைத் தொடர்ந்து கால்நடைகள், மீன்வளம், நிலத்தடி நீர், ஆற்றங்கரையோர மக்கள் மற்றும் ஒட்டுமொத்தச் சுற்றுச்சூழலும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழக அரசு உடனடியாக கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து, அதன் முடிவுகளை வெளிப்படையாக மக்களிடம் வெளியிட வேண்டும்.
மாசுபாட்டின் மூலத்தைக் கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசுடன் அவசர ஆலோசனை நடத்தி, சுத்திகரிக்கப்படாதக் கழிவுநீர் தமிழ்நாட்டிற்குள் வருவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் நீர்வளத்தையும் மக்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க, உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும்.
தமிழகத்தின் ஆறுகள் யாருடையக் கழிவுநீர் கால்வாயும் அல்ல. தமிழக விவசாயிகளின் வயல்களும், தமிழர்களின் குடிநீர் ஆதாரங்களும், எந்த மாநிலத்தின் அலட்சியத்திற்கும் பலியாக அனுமதிக்க முடியாது.
எனவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உயிர், விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க தேவையான அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.