சென்னை,
குமரி மாவட்ட பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்- மங்களூரு, நாகர் கோவில்- நியூ ஜல்பாய்குரி (மேற்கு வங்கம்) மற்றும் திருவனந்தபுரம்-தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை முன்பதிவு செய்யப்படாத 2-ம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் (குளிர்சாதன வசதி இல்லாமல்) இயக்கப் படுகின்றன.
இந்த ரெயில்களின் நிறுத்தம் கால அட்டவணைகளில் ஒரு சில மாற்றங்கள் செய்து இயக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரெயிலை இரணியல் ரெயில் நிலையத்தில் 2 மார்க்கங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரெயில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்று சேர்கிறது.
நள்ளிரவு நேரத்தில் தாம்பரம் செல்லும்போது பாதுகாப்பு பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினையால் அவதிப்படுகிறோம். எனவே கால அட்ட வணை மாற்றம் செய்து திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் சுமார் 3.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்துக்கு அதிகாலை 4 மணிக்கு செல்லும்படி இயக்க வேண்டும்.
இதேபோல நாகர்கோவில்-மங்களூரு இடையே இயக்கப்படும் அம்ரித் பாரத் ரெயில் 19 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. இதற்கான பயண நேரம் 17.20 மணி நேரம் ஆகும். எனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் மற்ற ரெயில்களை விட இந்த ரெயில் மெதுவாக செல்கிறது. எனவே இந்த ரெயிலின் கால அட்டவணையையும் மாற்றம் செய்து இரவு நேர ரெயிலாக இயக்க வேண்டும். இந்த மாற்றங்கள் செய்யப்பட்டால், பயணிகளுக்கு அம்ரித் பாரத் ரெயில்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும். ரெயில்வே அதிகாரிகள் இந்த கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.