சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதி தவிர்த்து 233 தொகுதிகளில் தவெக தனித்து களம் கண்டது. இதில் த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடினார்.
பெரம்பூர் தொகுதியில் விஜய் 1 லட்சத்து 19 ஆயிரத்து 454 வாக்குகள் பெற்று, 53 ஆயிரத்து 532 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதைபோல திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் 91 ஆயிரத்து 381 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜ் 63 ஆயிரத்து 965 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார். இதன்மூலம் சுமார் 27 ஆயிரத்து 416 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வாகை சூடினார்.
பொதுவாக, ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட தேர்தல் ஆணைய விதிகளில் வழிவகை இருப்பதுபோல், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். அதாவது, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த வகையில், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள விஜய், ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய், சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். எனவே, அவர் அடிக்கடி வந்து செல்லும் வகையில் பெரம்பூர் தொகுதியே அருகில் இருப்பதால், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவே அவர் தொடர விரும்புவார் என்று கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும். மற்ற கட்சிகளில், தற்போதைய வேட்பாளர்களே மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. அதாவது தி.மு.க. சார்பில் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. சார்பில் க.ராஜசேகரன், நா.த.க. சார்பில் கிருஷ்ணசாமி ஆகியோர் மீண்டும் போட்டியிடுவார்கள் என கூறப்படுகிறது.
இதைபோல தவெக சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.