தமிழக செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? - காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கி உள்ளது.

சேலம்,

மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜன வரி மாதம் 28-ந்தேதி வரை, 230 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்தேவை குறையும். அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும்.

கடந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால், குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டா பாசனத்திற்கு 222 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. மழை காரணமாக 96 டி.எம்.சி. உபரிநீரும் வெளியேற்றப்பட்டது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 8.6 டி.எம்.சி. தண்ணீரும், குடிநீர் தேவைக்காக சுமார் 20 டி.எம்.சி. தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் தற்போது வரை மேட்டூர் அணைக்கு சுமார் 320 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 760 கனஅடியாக இருந்தது. குடிநீருக்காக 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் நீர்திறப்பு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் மெல்ல உயரத்தொடங்கி உள்ளது.

கடந்த மாதம் 25-ந்தேதி 78.77 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 79.82 அடியானது. நீர்வரத்து மெல்ல அதிகரித்து வருவதால் இன்னும் சில நாட்களில் 90 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு எட்டினால், அணை வரலாற்றில் 92-வது ஆண்டில் குறித்த நாளான ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால், 90 அடியை எட்டாவிட்டாலும் குறித்த நாளில் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே, காவிரி டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.