தமிழக செய்திகள்

சபாநாயகருக்கு வாழ்த்தும்... சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தலும்... சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள்

ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார்.

சென்னை,

சபாநாயகருக்கு வாழ்த்துகள்...

தமிழ்நாடு சட்டசபையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பேரவைத் தலைவரான நீங்கள், இந்த அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்தி கொண்டு செல்கிறீர்கள். எங்களுக்கும் வாய்ப்பு தந்தாலும் எங்களைவிட ஆளும் கட்சியினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆதாரம் இல்லாமல் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைகுறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். எதிர்கட்சிகளைவிட ஆளும்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை அதிகமாக நீங்கள்தான் அவைகுறிப்பில் இருந்து நீக்கி வரலாறு படைத்திருக்கிறீர்கள். அதற்கு என் வாழ்த்துகள்.

உருட்டல், மிரட்டல்...

சட்டப்பேரவை நேரலை செய்யப்படுகிறது. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் தருகிறார்கள். இப்போது பாட்டு எல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்திருக்கிறோமா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமோ என்று சந்தேகம் வருகிறது. நீங்கள் இதையெல்லாம் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினாலும் ரீல்ஸ் மூலமாக சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. நீங்கள் அதை நீக்குவதை அர்த்தமில்லாமல் போய்விடுகிறது.

தனது டேபிளில் பைல் இருப்பதாகவும், திறந்து பார்க்க வைத்துவிடாதீர்கள் என்று முதல்-அமைச்சர் விஜய் பேசினார். தயவு செய்து அவர் திறந்து பார்க்க வேண்டும், நடவடிக்கை எடுக்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? காலம் தாழ்த்துகிறீர்கள்? ஜோதிடர் சொன்னால் தான் திறப்பீர்களா? நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?. நடவடிகை எடுப்பேன் என உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் என்றார்.

திமுகவை தோற்கடித்து...

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்-அமைச்சர் அன்று சொல்ல வந்தது. இவர்கள் செய்யாத ரீல்ஸா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள்?

2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?. நேரலை செய்து வெளிப்படையாக நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம்" என்று கூறினார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலை செய்தது திமுகதான் என்றார். இவ்வாறு காரசார விவாதம் நடந்தது.

டிரெண்டாகி

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சட்டப்பேரவையில் நாங்கள் பேசியவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டீர்கள். ஆனால், இவையனைத்தும் நேரலையில் சென்று விட்டது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? சட்டப்பேரவை அலுவல் நேரலையை நாங்கள் எதிர்க்கவில்லை. அது ஒரு நல்ல முயற்சி, அதனை நாங்கள் பாராட்டுகிறோம். அவைக்குறிப்பில் நீங்கள் நீக்கியவையெல்லாம் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது" என்று தெரிவித்தார்.

சபாநாயகர் வலியுறுத்தல்

இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியதாவது:-

குற்றச்சாட்டுகளை எந்தப் பக்கம் இருந்து வைத்தாலும், ஆதாரபூர்வமான கருத்துகளைச் சொல்வதன் மூலமாகவே அவையின் குறைந்தபட்ச மாண்பை நாம் காப்பாற்ற முடியும். அதே வேளையில், ஆதாரமற்ற கருத்துகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டியது என்பது அவையின் மரபு.

இனி வருங்காலத்திலும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவது என்பது எனது தனிப்பட்ட உரிமை. ஏனெனில், அவையின் மாண்பை காப்பாற்றியாக வேண்டும்.

மேலும், அவைக் குறிப்பில் இருந்து கருத்துகளை நீக்காமல் பேச முயற்சிப்பதும், ஆதாரங்கள் இல்லாமல் பேசாமல் இருப்பது நல்லது. ஏனெனில், இரு தரப்பினரும் ஆதாரங்களை வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும் என நானும் மக்களும் விரும்புகிறோம். போகிற போக்கிலே அள்ளித் தெளித்துப் போகிற இடமல்ல இது. இங்கு பேசும்போது அவையின் கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டும்.

எல்லா பேச்சுகளை நீக்குவது என்பது எனது நோக்கமல்ல. இருப்பினும், அவைக்குப் பயன்தராத, நம் பண்பாட்டுக்கு உதவாத, அவையின் மாண்பைக் குறைக்கக்கூடிய எந்த விஷயமாக இருந்தாலும், அவற்றை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவேன்" என்று தெரிவித்தார்.

இது தான் மரபா? - ஓபிஎஸ் கேள்வி

எதிர்கட்சி தலைவருக்கான மரியாதையை சபையில் தர வேண்டும். கேபினேட் அந்தஸ்து எதிர்கட்சி தலைவருக்கு உள்ளது. அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென அமைச்சர் எழுந்து பேசுகிறார்கள். இது மரபா?. 4 முறை எதிர்கட்சி தலைவர் எந்திருச்சு எந்திருச்சு உட்கார்றாரு.. நீங்க மத்தவங்கள பேச கூப்புடுறீங்க.. இது எந்த விதத்துல நியாயம் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார்.

நீங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. முதல்-அமைச்சர் பற்றி பேசும்போது, அமைச்சர் எழுந்து பேசாமல் போனால், இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில் அளித்தார்.