சென்னை,
கடந்த 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், கடல் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், கடலில் மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் கிழக்கு கடல் பகுதிகளில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி வருகிற 14-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் விசைப்படகு, இழுவலை படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. ஆனால் கரை பகுதிக்கு சென்று மீன்பிடி தொழில் செய்யும் சிறியவகை படகுகள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதை தொடர்ந்து நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து படகுகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு வர்ணம் பூசுதல், படகுகளில் உள்ள இரும்பு கம்பிகளில் உப்பு காற்றினால் ஏற்பட்டுள்ள பழுதினை வெல்டிங் செய்து சரி செய்தல், பலகைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் விசைப்படகு மீனவர்கள் சுமார் ஒரு வாரகாலம் கடலில் தங்கி மீன்பிடித்து வருவார்கள். அப்போது பிடிக்கப்படும் மீன்களை ஐஸ் வைத்து பதப்படுத்துவார்கள். இதனால் நாகையில் ஐஸ் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெறும். ஆனால் தற்போது விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாததால் ஐஸ் தயாரிக்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐஸ் பிளாண்டுகளிலும் மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.