தமிழக செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியை பணியில் சேர்ப்பு: கல்வி அதிகாரிகள் உள்பட 7 பேர் மீது வழக்கு

வேலூர் மாவட்டம் , போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியை பணியில் சேர்ந்த கல்வி அதிகாரிகள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பி.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரகுமார். வழக்கறிஞரான இவர் ஆம்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசு நிதிஉதவி பெறும் ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளியில் ஹேமமாலினி என்பவர் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

போலி ஆவணங்கள் மூலம் இவரை ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் சேர்த்துள்ளனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். பின்னர் மோசடியாக வணிகவியல் துறையில் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பதவி உயர்வு வழங்கி உள்ளனர். இதன் மூலம் ஹேமமாலினி ரூ.40 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளார். அவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இந்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் ஆசிரியை ஹேமமாலினி, இந்து பள்ளி சங்க துணைத் தலைவர் சுரேஷ்பாபு, திருப்பத்தூர் கல்வி மாவட்ட முன்னாள் அதிகாரி ராஜமாணிக்கம், பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி சாம்பசிவம், திருப்பத்தூர் கல்வி மாவட்ட அதிகாரி கண்காணிப்பாளர் சிவக்குமார், எழுத்தர் பரமேஸ்வரி, சென்னை நடுநிலைப்பள்ளிகளின் உதவி இயக்குனரின் நேர்முக உதவியாளர் கிரினிவாசன் ஆகிய 7 பேர் மீது வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.