சென்னை,
சென்னையில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் 85 சவரன் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடி 14-வது மேற்கு குறுக்கு தெருவைச் சேர்ந்த அன்குஷ் (வயது 33), தனது வீட்டின் தரைதளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவரது கடைக்கு வாடிக்கையாளர் போல் முகம் தெரியாதபடி ஹிஜாப் அணிந்து வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், நகை வாங்குவது போல் கடையில் உள்ள ஒவ்வொரு நகையையும் எடுத்து பார்ப்பார். ஆனால் அந்த மாடல் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு எதுவும் வாங்காமல் சென்றுவிடுவார்.
இந்த நிலையில் சமீபத்தில் கடையில் இருந்த நகைகளை அன்குஷ் கணக்கிட்டபோது சுமார் 85 சவரன் நகைகள் குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் தனது கடைக்கு வாடிக்கையாளர் போல் கடந்த 4 மாதங்களாக வந்து சென்ற பெண் தான், அந்த நகைகளை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. அவர் திருடிய நகைகளை தனது ஆடையில் மறைத்து காரில் தப்பிச்செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து அன்குஷ் அளித்த புகாரின்பேரில் எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டவர் மீஞ்சூரைச் சேர்ந்த ரிகானா(50) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரி டம் இருந்து 20 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும், அவர் இது போல் வேறு எங்காவது நகை திருட்டில் ஈடுபட்டாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.