தமிழக செய்திகள்

குடும்பத்தகராறில் இரும்புக்கம்பியால் பெண் அடித்துக் கொலை - கணவர் போலீசில் சரண்

திருவையாறு அருகே குடும்பத்தகராறில் இரும்புக்கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே நடுக்காவேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மணத்திடல் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(58 வயது). இவருடைய மனைவி ஜெயலட்சுமி (50 வயது). கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

ஜெயலெட்சுமி தஞ்சையில் ஒரு ஓட்டலில் வேலை செய்து கொண்டு தனது மகள், மகனுடன் தஞ்சையில் வசித்து வந்தார். நேற்று மணத்திடலுக்கு ரேஷனில் அரிசி வாங்க ஜெயலட்சுமி தனது கணவர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் வைத்து ரவிச்சந்திரனுக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் இரும்பு கம்பியால் ஜெயலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஜெயலட்சுமி உயிரிழந்தார். பின்னர் ரவிச்சந்திரன் நடுக்காவேரி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெயலெட்சுமியின் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத்தகராறில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.