தமிழக செய்திகள்

அம்பத்தூர் அருகே ஆட்டோவில் பெண் கொடூரமாக வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

திரு.வி.க நகர்,

அம்பத்தூர் அருகே ஆட்டோவில் வைத்து பெண்ணை வெட்டிக்கொலை செய்து மர்ம கும்பல் உடலை சாலையில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொலை

அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவிற்குள்ளிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் திடீரென கேட்டுள்ளது. அதைக் கவனித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அடுத்த சில வினாடிகளில், உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றபோது 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணை ஆட்டோவுக்குள்ளேயே வைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியதும், வலி தாங்காமல் அந்த பெண் சத்தமிட்டு கதறியதால் ஆட்டோவில் இருந்து வெளியே தூக்கி வீசிவிட்டு அதே ஆட்டோவில் மர்ம கும்பல் தப்பியோடியதும் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? மற்றும் கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.