தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 60). இவர் சோப்பு பவுடர் விற்பனை செய்து வந்தார். இவரது மனைவி அமுதா (50). இவர்களுக்கு சிவராஜ் என்ற மகனும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சிவராஜ் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அமுதாவின் அக்காவான கண்ணம்மாவுக்கும் (67), சிதம்பரத்திற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணம்மாவின் கணவர் மற்றும் மகன் இறந்த நிலையில் வேறு குழந்தைகள் இல்லாததால் சிதம்பரம் வீட்டில் வந்து கண்ணம்மா நிரந்தரமாக தங்கியுள்ளார்.
ஒரே வீட்டில் கண்ணம்மாவும், சிதம்பரமும் ஒரு பகுதியிலும், அமுதா ஒரு பகுதியிலும் வசித்து வந்துள்ளனர். இருவரும் அமுதாவிற்கு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் இருந்த அமுதா நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் கணவர் சிதம்பரம், அக்காள் கண்ணம்மா ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக அமுதா பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார்.
நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த சிதம்பரமும், கண்ணம்மாவும் தங்கள் உடல் மீது தீப்பிடித்து எரிந்ததால் இருவரும் அலறி உள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேராவூரணி தீயணைப்பு வீரர்கள், கிராம மக்களுடன் இணைந்து தீயை அணைத்து சிதம்பரம், கண்ணம்மா ஆகிய இருவரையும் உடனடியாக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெட்ரோலை ஊற்றி எரித்தபோது அமுதாவின் கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேராவூரணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.