தூத்துக்குடி,
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 4-வது தெருவைச் சேர்ந்த அழகுபாண்டி மனைவி சாந்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 7 வயதில் மகளும் உள்ளனர். நேற்று இரவு சாந்தி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் வரவேற்பறையில் ஒன்றாகப் படுத்து உறங்கியுள்ளார். நள்ளிரவில் எழுந்த அவர், வீட்டின் உள்அறைக்கு சென்று அங்குள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்று காலை சாந்தியின் கணவர் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உறவினர்கள் உதவியுடன் உடலை கீழே இறக்கி, சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில், சாந்திக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வலது காலில் வாதம் போன்ற பாதிப்பு ஏற்பட்டு, கால் வீக்கத்திற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தற்போது மீண்டும் கால் வலி அதிகமாக இருந்ததால், அந்த வேதனை தாங்காமல் அவர் தூக்குப்போட்டு இறந்ததாக கணவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் வசிக்கும் சாந்தியின் பெற்றோர் தரப்பில் போலீசாரிடம் பேசுகையில், அழகுபாண்டி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு மற்றும் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தகவலறிந்து வந்த சிப்காட் போலீசார் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து 194 பி.என்.எஸ்.எஸ். பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.