தமிழக செய்திகள்

சென்னை கே.கே. நகரில் கார் மோதி பெண் உயிரிழப்பு

ஹேமலதா ஓட்டிச்சென்ற மொபட்டின் பின்னால் வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேமலதா மீது மோதியது.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஹேமலதா (வயது 26). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஹேமலதா, நேற்று சென்னை தியாகராயநகர் நோக்கி மொட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கே.கே.நகர் அண்ணா சாலையில் சென்றபோது, திடீரென மொபட் கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்றுகொண்டிருந்த வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி ஹேமலதா கீழே விழுந்தார்.

அப்போது ஹேமலதா ஓட்டிச்சென்ற மொபட்டின் பின்னால் வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் ஹேமலதா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கைது

அங்கு ஹேமலதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். தகவலறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்தனர். மேலும் காரை ஓட்டிவந்த சென்னை நேசப்பாக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.