திருச்சி,
தொட்டியம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் மோதி பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் - காட்டுப்புத்தூர் சாலையில் செல்வராணி என்ற பெண் மீன் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மீன் விற்பனை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியே டாடா சரக்கு வாகனம் கான்கிரீட் கலவை இயந்திரத்துடன் வந்தது. அப்போது திடீரென வாகனத்தின் கான்கிரீட் கலவை இயந்திரம் தனியாக கழன்று சென்று மீன் விற்பனை செய்து கொண்டிருந்த செல்வராணி மீது பயங்கரமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்வராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்ததும், சரக்கு வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர். மேலும், தப்பி ஓடிய ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.