தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்த இளம்பெண் அனிதா (வயது 24). இவருக்கும் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூரை சேர்ந்த சுரேசுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
புதுமணத்தம்பதியான இருவரும் நேற்று மாலை கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சென்றுள்ளனர்.
கோவிலில் தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு சென்றுள்ளனர். மலையில் ஏராளமான குரங்குகள் இருந்த நிலையில் தம்பதி கையில் வைத்திருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்துள்ளனர்.
அப்போது திடீரென ஏராளமான குரங்குகள் சூழ்ந்ததால் அச்சமடைந்த அனிதா நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று உயிரிழந்த இளம்பெண் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.