தமிழக செய்திகள்

படிக்கட்டில் தவறி விழுந்து பெண் பலி - கூடுவாஞ்சேரி அருகே சோகம்

கால் இடறி, படிக்கட்டில் உருண்டு விழுந்து சுதா பலத்த காயமடைந்தார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே படிக்கட்டில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயரம்பேடு, ஆர்.ஆர். அவென்யூ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). இவரது மனைவி சுதா (32). இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுதா மறைமலைநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

சுதாவுக்கு தினமும் இரவு உணவுக்குப் பிறகு மொட்டைமாடியில் நடைபயிற்சி செய்வது வழக்கமாக இருந்தது. சம்பவத்தன்று இரவு, வழக்கம்போல் நடைபயிற்சி முடித்து, நான்காவது மாடியில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்ப படிக்கட்டில் இறங்கி வந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி, படிக்கட்டில் உருண்டு விழுந்து சுதா பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பொத்தேரியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.

ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுதா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.