தமிழக செய்திகள்

புளியம்பழம் பறித்தபோது மரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

புளியம்பழம் பறித்தபோது மரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கணக்கன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மனைவி வனசுந்தரி (61 வயது). இவர் தனது நிலத்தில் உள்ள மரத்தில் ஏறி புளியம்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்து எதிர்பாராதவிதமாக அவர் தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வனசுந்தரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வனசுந்தரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வனசுந்தரியின் மகன் மணிகண்டன் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காத்தமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.