கல்லக்குடி,
கல்லக்குடியில் மகனின் பிறந்தநாளுக்கு நூடுல்ஸ் வாங்க சென்ற பெண் விபத்தில் பலியானார். அவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்து மோதிய என்ஜினீயரும் இறந்தார்.
திருச்சி மாவட்டம் கல்லக்குடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி ஷீலா (வயது 40). ஓட்டல் தொழிலாளியான இவருக்கு 17 வயதில் மகளும், தினேஷ் (14), அஜய் (11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மணி ஏற்கனவே இறந்துவிட்டார்.
நேற்று முன்தினம் அஜய்க்கு பிறந்தநாள். இதனால் அவர் தனது தாயிடம் நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதனால் இரவு ஷீலா நூடுல்ஸ் வாங்குவதற்காக அஜய்யுடன் வீட்டுக்கு எதிர்ப்புறம் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கல்லக்குடி காமராஜபுரத்தை சேர்ந்த மலர்கொடி மகன் பாலகுமார் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ஷீலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஜய்யின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார். பாலகுமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலகுமார் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த பாலகுமார் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சோபியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விவசாரணை நடத்தி வருகின் றனர். ஷீலாவின் கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், ஷீலாவும் இறந்த தால் மகளும், 2 மகன்களும் ஆதரவு இன்றி இருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு அவர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.