விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள இலையாண்டிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் (55 வயது). விவசாயி. இவரது மனைவி காமாட்சி. அய்யனார் தனது தம்பி நிலத்தை குத்தகைக்கு எடுத்து மல்லிகை பூ சாகுபடி செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அய்யனார் மற்றும் அவரது மனைவி காமாட்சி, அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி சாந்தி (43 வயது) ஆகிய 3 பேரும் மல்லிகை பூ பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது நிலத்தின் ஒரு பகுதியில் உயரழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத சாந்தி பூ பறிக்கும்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார்.
இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் அலறினார். இதைப்பார்த்த அருகில் இருந்த அய்யனார் உடனே சாந்தியை காப்பாற்ற அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். ஆனால், அய்யனார் உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் காமாட்சி மீது மின்சாரம் பாய்ந்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதையடுத்து அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் உடனடியாக ஓடிவந்து மின்இணைப்பை துண்டித்தனர். பின்னர் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த காமாட்சியை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூ பறிக்கும்போது மின்சாரம் தாக்கி பெண் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.