தமிழக செய்திகள்

பெண் வெட்டிக்கொலை; 10 சவரன் நகை கொள்ளை: கபடி வீரர் அதிரடி கைது

விளாத்திகுளம் அருகே காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணை வெட்டிக்கொலை செய்து 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பெண்ணைக் கொலை செய்து 10 சவரன் நகைகளை கொள்ளையடித்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த கபடி வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பெண் கொலை, 10 சவரன் நகை கொள்ளை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காடல்குடி மிட்டா வடமலாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த திருக்கண்ணன் மனைவி கலாவதி (வயது 62). ஓய்வு பெற்ற சத்துணவு மேற்பார்வையாளரான இவர், ஜூலை 6-ம் தேதி இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவதியை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

போலீசார் விசாரணை

காலையில் எழுந்த கணவர் திருக்கண்ணன், மனைவி கொலையுண்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விளாத்திகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடத்தியும் துப்பு கிடைக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து உள்ளூர் நபர்தான் இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர்.

அதன் அடிப்படையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கபடி வீரர் திருமணிமுருகன்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திருமணிமுருகன் கலாவதியை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த பின், தன் வீட்டின் முன் கட்டிலில் சர்வ சாதாரணமாகத் தூங்கியுள்ளார்.

கபடி வீரர் கைது

காலையில் கலாவதியின் உடலை பார்த்து அழுது நாடகமாடியதுடன், இறப்பு குறித்து போலீசாருக்க தகவல் தெரிவித்து, உடல் அடக்கம் முடியும் வரை கூடவே இருந்துள்ளார். போலீசார் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்ததில், திருடப்பட்ட தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான கபடி வீரர் திருமணிமுருகன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.