தமிழக செய்திகள்

பெண்ணை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம்.. சமையல்காரர் கைது

வீட்டின் குடிநீர் குழாயில் துர்நாற்றம் வீசியதாக சந்தேகித்து வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சேலம்,

பெண்ணை கொலை செய்து உடலை 7 துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் மூட்டை கட்டி வீசிய சம்பவம் தொடர்பாக சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை

சேலம் மாவட்டம் அரிசிபாளையம் பகுதியில் உள்ள குணபாலன் ராமசாமி தெருவில் ரமேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் ஊருக்கு சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பினார். மறுநாள் காலையில் வீட்டில் உள்ள குடிநீர் குழாயை திறந்தபோது துர்நாற்றம் வீசியதாக தெரிகிறது. இதனால் ரமேஷ் வீட்டின் மேல்புறம் உள்ள குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தார். அப்போது தண்ணீரில் 3 மூட்டைகள் கிடந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரமேஷ் உடனடியாக பள்ளபட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து, அந்த 3 மூட்டைகளையும் பிரித்து பார்த்தனர். மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்தன. பெண்ணின் உடல் 7 துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டி சின்டெக்ஸ் டேங்கில் போட்டுள்ளது தெரியவந்தது. உடல்பாகங்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் மோகன் குமார மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் கணபதி என பச்சை குத்தப்பட்டிருந்தது. இதனை அறிந்து வந்த அவரது கணவர் ஜீவானந்தம், அவரது மகள் மற்றும் உறவினர் சேர்ந்து அந்த சடலத்தை அடையாளம் காட்டினர். கொலை செய்யப்பட்ட பெண், சேலம் மேட்டுப்பட்டி தாதனூர் பாலாஜி காலனியை சேர்ந்த தங்கமணி (50) என்பது தெரியவந்தது.

இவர் கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டாக்டர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலை செய்துவிட்டு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் ஆகஸ்ட் 28-ந்தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து தங்க மணியை தேடி வந்த நிலையில் அவரது உடல் தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்டார்.

சமையல்காரர் கைது

இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், சமையல்காரர் செல்லத்துரை என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. சமையல்காரரின் தங்கையும் தங்கமணியும் நண்பர்களாக பழகி வந்தனர். அவரின் மூலமாக சமையல்காரர் தங்கமணியிடம் அறிமுகமானார். இந்த நிலையில் தங்கமணி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து சமையல்காரரின் தங்கை மொபைல் சுவிட்ச் ஆப் ஆனதால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கொலையில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்குப் பிறகு சமையல்காரர் செல்லத்துரையை போலீசார் கைது செய்தனர். அவர் தங்கமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT