தரகம்பட்டி,
கரூர் அருகே, குடும்ப கஷ்டத்தை நீக்க மாந்திரீகம் செய்வதாக கூறி பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த விபூதி கொடுத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளையும் மர்மநபர் கொள்ளையடித்து சென்றார்.
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் கம்பங்கூழ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த தனது உறவினரிடம் குடும்ப கஷ்டங்களை கூறியுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், அந்த பெண்ணின் கடைக்கு வந்து, கம்பங்கூழ் வாங்கி குடிப்பதுபோல் நடித்து, அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார். தொடர்ந்து அவர் அந்த பெண்ணிடம் 'நான் உங்கள் குடும்ப கஷ்டத்தை நீக்கி தருகிறேன். அதற்கு ஒரு சிறிய மாந்திரீகம் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண் அவரிடம் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணை கம்பங்கூழ் கடைக்குள் அழைத்துச் சென்ற அந்த மர்ம நபர், தான் ஏற்கனவே மயக்க மருந்து கலந்து எடுத்து வந்த விபூதியை அந்த பெண்ணிடம் கொடுத்து, அதனை வாயில் போடுமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண், அந்த விபூதியை வாயில் போட்ட சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து மர்ம நபர், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த அரை பவுன் தாலி, அரை பவுன் மோதிரம் மற்றும் கால் விரல்களில் அணிந்திருந்த வெள்ளி மெட்டி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் தனது ஆடைகள் கலைக்கப்பட்டு அலங்கோலமாக இருந்ததை கண்டு, தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இது குறித்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் இப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மர்மநபரை வலை வீசி தேடிவருகின்றனர்.